Official Site

அறிவர்‌ தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் தொகுப்பு:

0 773

Get real time updates directly on you device, subscribe now.

அறிவர்‌ தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் தொகுப்பு:
~~~~~~
நிருபர் கேள்வி: காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்களிடம் கடிந்து கொண்டதாகத் தகவல் வெளியானதே, உண்மையா?

தலைவரின் பதில்: சேலம் மாவட்டம், மோரூரில் வி.சி.க கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகப் போராட்டம் அறிவித்திருந்தேன். முதல் போராட்டம் சென்னையில் நடந்தது. இரண்டாவது போராட்டத்தை சேலத்திலும், மூன்றாவது போராட்டத்தை மதுரையிலும் அறிவித்திருந்தேன். அது குறித்து முதல்வர் என்னிடம் பேச விரும்புவதாகத் தகவல் வந்தது. அதனால் சேலம், மதுரையில் நடத்தவிருந்த போராட்டங்களைத் தள்ளிவைப்பதாகச் செப்டம்பர் 28-ம் தேதி அறிவித்துவிட்டு, அக்டோபர் 1-ம் தேதி மாலை அறிவாலயத்தில் முதல்வரைச் சந்தித்தேன். அவரிடம் நான், ‘எனக்கு எந்தக் கோரிக்கையும் இல்லை; என் மனதில் இருக்கும் குறையையும் வலியையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று மட்டுமே சொன்னேன். நான் சொன்ன அனைத்தையும் எந்தச் சலனமும் இல்லாமல் கேட்டுக்கொண்ட முதல்வர், ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று மட்டும்தான் சொன்னார். மற்றபடி, வி.சி.க தோழர்கள் குறித்தோ, தொண்டர்கள் குறித்தோ முதல்வர் சொன்னதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை

.

கேள்வி: உங்களின் குறைகளைக் கேட்க முதல்வர் தயாராக இருக்கும்போது, போராட்டத்தை அறிவித்தது ஏன்?

பதில்: ஒரு முதல்வரிடம் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. சேலம் சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் வேறொரு பிரச்னை தொடர்பாக அவரைச் சந்தித்திருந்தேன். அதற்கு சில நாள்களுக்கு முன்பும் மற்றொரு பிரச்னைக்காகச் சந்தித்தேன். ஆட்சி அமைத்த நான்கு மாதத்தில் ஐந்தாறு முறை அவரைச் சந்தித்துவிட்டேன். தொடர்ந்து இப்படிச் சந்தித்துக்கொண்டே இருப்பது நாகரிகமாக இருக்காது என்பதால் சேலம் விவகாரத்தில் முதல்வரைச் சந்திக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவற்றை, ஆட்சியிலிருப்பவர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் போராட்டம் நடத்தினோம்.

கேள்வி: காவல்துறையினரை வி.சி.க தொண்டர்கள் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகினவே?

பதில்: பெரியார் பிறந்தநாளில் சேலத்தில் நான் கொடியை ஏற்றிவைப்பதாகத்தான் முதலில் திட்டம் இருந்தது. ‘அனுமதியின்றி கொடியை ஏற்றக் கூடாது’ என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டதால், பெரியார் பிறந்தநாள் விழாவில் மட்டும் பங்கேற்றுவிட்டுத் திரும்பிவிட்டேன். அதன் பிறகு கொடியை ஏற்ற வி.சி.க சார்பில் காவல்துறையிடம் அனுமதிக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘அனுமதி கிடைத்துவிடும்’ என்ற நம்பிக்கையில் இரண்டு நாள்கள் கழித்துத்தான் கொடி ஏற்றவும் சென்றிருக்கிறார்கள். ஆனால், ‘பா.ம.க-வினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்படும்’ என்றெல்லாம் சொல்லி காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கொடிக்கம்பத்தைப் பிடுங்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக அந்தப் பகுதி பா.ம.க எம்.எல்.ஏ-விடம் கேட்டதற்கு ‘அப்படி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார். யூகத்தின் அடிப்படையில் காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததுதான் பிரச்னைக்குக் காரணம். மற்ற கட்சியினர், அமைப்புகளின் கொடிகள் பறக்கும்போது நம்முடைய கொடியை ஏற்றுவதற்கு மட்டும் ஏன் காவல்துறை தடை போடுகிறது என்ற வலி தலித் மக்களிடம் இருக்கிறது. அதனாலேயே காவல் துறையுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்டத்திலிருந்த பிற சமூகத்து இளைஞர்கள் கல் எறிந்திருக்கிறார்கள். அதில்தான் காவல்துறையினர் காயம்பட்டிருக்கிறார்களே தவிர, தலித் மக்கள் தாக்கி காயமடைந்தார்கள் என்பது தவறான தகவல்.

கேள்வி: கண்ணகி – முருகேசன் கொலை வழக்கை நடத்த வேண்டாம். இழப்பீடு வாங்கித் தருகிறேன்’ என்று நீங்கள் சொன்னதாகப் புகார் எழுந்திருக்கிறதே?

பதில்: மோசமான அவதூறு இது. பொது வாழ்க்கையில் 32 ஆண்டுகளாக இருக்கிறேன். இதுபோல எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் நடந்துகொண்டதில்லை. ‘இரண்டு தரப்பிலும் மரணங்கள் நடந்திருக்கின்றன, அதைப் பெரிதுபடுத்த வேண்டாம். சமரசம் செய்துகொள்ளலாம் என்று காவல்துறையினரும் சாதி இந்துக்களும் மிரட்டுகிறார்கள்; ஒரே ஊரில் இருந்துகொண்டு அச்சத்தோடு வாழ முடியாது’ என முருகேசன் குடும்பத்தினர் பயப்படுவதாக எங்களுக்குத் தகவல்கள் வந்தன. உடனே, நான் முருகேசன் குடும்பத்தினரைச் சென்னைக்கு வரவழைத்து, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, அந்த ஆணவப் படுகொலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தேன். மேலும், ‘இந்த வழக்கை உள்ளூர் காவல்துறை நடத்தக் கூடாது; சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’ என்றும் கோரிக்கை வைத்தேன். தொடர்ந்து போராட்டங்களையும் முன்னெடுத்தோம். இந்த வழக்கை நடத்த வழக்கறிஞரை நியமித்தேன். அப்படியிருக்கும்போது நாங்கள் எப்படி சமாதானத்துக்குப் போயிருப்போம்?

கேள்வி: பிறகு எப்படி உங்கள் பெயர் அடிபட்டது?

பதில்: தமிழ்நாட்டில் வன்கொடுமைகள் நடந்த அனைத்து இடங்களிலும் வி.சி.க-தான் முன்னின்று சாதி வெறிக்கு, காவல்துறைக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. அப்படியிருக்கும்போது நாங்கள் எதன் அடிப்படையில் சமாதானத்துக்குச் செல்லப்போகிறோம்? ‘தலைவர் பேசுவதாகச் சொல்லி என்னிடம் யாரோ போன் கொடுத்தார்கள். ஆனால், பேசியது தலைவரா என எனக்குத் தெரியாது’ என்றுதான் முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு சொல்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திட்டமிட்டு என்மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். அதுவும், ‘அன்புமணியிடம் நாங்கள் பேசிவிட்டோம்’ என்று சொல்வதெல்லாம் மிகப்பெரிய அபாண்டம். சொல்லப்போனால், அன்புமணி அப்போது அரசியலிலேயே இல்லை.

கேள்வி: உங்கள் மீது அவதூறு பரப்பவேண்டிய அவசியம் என்ன?

பதில்: எனக்கு எதிரான அவதூறு அல்ல இது. தலித் சமூகத்தின் அரசியல் எழுச்சியை ஒட்டுமொத்தமாக காலி செய்வதற்கான சதி. இதன் மூலம் எனது 32 வருட அரசியல் வாழ்க்கையை காலி செய்ய நினைக்கிறார்கள்.

கேள்வி: உங்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, ‘உள்ளாட்சித் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் மகிழ்ச்சியும் இருந்தது; வருத்தமும் இருந்தது’ என்று கூறியிருந்தாரே?

பதில்: எல்லாத் தேர்தலிலும் அப்படித்தான் இருக்கும். தேர்தல் என்றாலே அதிகாரப் பகிர்வுக்கான போட்டிதான். அதில் நூறு சதவிகிதம் மகிழ்ச்சியும் இருக்காது; நூறு சதவிகிதம் வருத்தமும் இருக்காது. அதிக இடங்களில் வெற்றிபெற்று, அதிகாரத்துக்கு வர வேண்டும் என்றுதான் ஒவ்வொரு கட்சியுமே விரும்பும். வி.சி.க-வுக்குச் சட்டமன்றத் தேர்தலில் பத்து தொகுதிகளை ஒதுக்குவதில் தி.மு.க-வுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், அந்தப் பத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று வருவார்களா என்று நிச்சயம் கணக்கு போட்டுப் பார்ப்பார்கள். அதைப் புறந்தள்ள முடியாது.

கேள்வி: இந்த உள்ளாட்சித் தேர்தலில், கூட்டணிக் கட்சிகள் சில தனித்துப் போட்டியிட்டிருக்கின்றன. அந்த வகையில் நீங்கள் வலுவாக இருக்கும் வட மாவட்டங்களிலாவது தனித்துப் போட்டியிடலாம் என்று நினைத்தது உண்டா?

பதில்: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி யிட்டால், தொண்டர்களைத் திருப்திப்படுத்த முடியும். கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளும்போது ஒரு பதவிக்கு 10 பேர் கேட்கிறார்கள் என்றால், தனித்துப் போட்டியிடும்போது ஒரு பதவிக்காகப் போட்டியிட விரும்புபவர்களின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துவிடுகிறது. அதில் ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும். இதுவும் சிக்கலைத்தான் உருவாக்கும். ஏற்கெனவே, தனியாகப் போட்டியிட்டுச் சில தேர்தல்களில் வெற்றிபெற்றிருக்கிறோம்தான். ஆனால், அந்த வெற்றி சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழப்பதைவிட, குறிப்பிட்ட சில இடங்களில் போட்டியிட்டு அதிகாரத்தை அடைவதைத்தான் ஆரோக்கியமானதாகக் கருதுகிறேன். போட்டியிடும் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் அதிகாரத்தின் மையத்தைத் தொட்டிருக்கிறோம். அதுதான் அரசியல் கணக்கு.

கேள்வி: தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்புக்கு ஒரு தலித் தலைவர் வர முடியும் என நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: தமிழ்நாட்டிலும் அதற்கான காலம் கனியும். பூர்வீகக் குடியைச் சார்ந்த, தலித் ஒருவர் முதல்வராவார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது.

நன்றி: ஜூனியர் விகடன்

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More