என்ன மாதிரியான அரசியல் இது.. வாயில் வந்ததை எல்லாம் பேசுவதா? -அண்ணாமலை கருத்துக்கு திருமாவளவன் பதிலடி
கவன ஈர்ப்புக்காக வாயில் வந்ததை எல்லாம் பாஜகவினர் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை திமுகவையும், அமைச்சர் சேகர்பாபு, செந்தில் பாலாஜியையும் சீண்டும் விதமாக சில நாள்களுக்கு முன்பு பேட்டிக்கொடுத்திருந்தார் அதில், திமுக அமைச்சர் சேகர் பாபு, பாஜகவை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும் என கூறியுள்ளதாக அறிகிறேன். தொட்டுப் பார்க்கட்டும் 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம். மோடி டெல்லியில் உள்ளார். தொடுவார்கள் என காத்திருக்கிறோம், தொட்டுப்பார்க்கட்டும் திமுகவுக்கு வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்போம்.
ஒரு ஹார்பர் தொகுதியில் இருந்து சேகர் பாபு, அரசியல் செய்கிறார். பாஜக 11 கோடி உறுப்பினர்களை கொண்டது. செந்தில் பாலாஜி, சேகர் பாபு ஆகியோர் ஒரு தொகுதியோட ராஜாக சுற்றி வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை சரியாக பயன்படுத்துவார்கள் என நம்புகிறோம். ஒரு தொகுதியில் அரசியல் செய்பவர்கள் இங்கு வந்து மிரட்டல் விடுக்கக்கூடாது எனக் கூறியிருந்தார்.பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு திமுகவின் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ‘கவன ஈர்ப்புக்காக வாயில் வந்ததை எல்லாம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பாஜகவினர் உருப்படியான அரசியல் எதையும் பேசுவதில்லை. தனிநபர் விமர்சனம் செய்வதன் மூலம் அனைவரும் தங்களை கவனிக்க வேண்டும், தங்களைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்ற உளவியலை கொண்டிருக்கிறார்கள். அது அவர்களின் பலவீனத்தை காட்டுகிறது’ என திருமாவளவன் கூறினார்.