
விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து திருச்சியில் செய்தியாளளை சந்தித்த திருமாவளவன் பேசும்போது, ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது அதில் வி.சி.க43 ஒன்றிய கவுன்சில் இடங்களிலும் 4மாவட்ட கவுன்சில் இடங்களிலும் போட்டியிட்டது. அதில் 27 ஒன்றிய கவுன்சில் இடங்களையும் 3மாவட்ட கவுன்சில் இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம் இது அனைத்து தரப்பு மக்களும் வி.சி.கவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை காட்டுகிறது.
இரட்டை வேடம்
பா.ஜ.க வும் சங்பரிவார் இயக்கங்களும் சமூக நீதிக்கு எதிராக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டு வருகின்றனர்
பா.ஜ.க ஒருபுறம் சமூக நீதியை ஆதரிப்பது போலவும் மறுப்பக்கம் அதற்கு சவக்குழி தோண்டும் வேலையையும் செய்து வருகிறது, இது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது, இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். வரும் 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அதிகாரத்தில் அமர்வதை தடுக்க இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது.
தஞ்சை கும்பகோணம் அருகே பிரபாகரன் என்கிற இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம், அந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் எந்த கட்சியினராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளாக கெளரவ கொலைகள் தமிழ்நாட்டில் அதிகமாக நடந்து வருகிறது, வட மாநிலத்தை விட தமிழ்நாட்டில் ஆணவப்படு கொலைகள் குறைவாக இருக்கும் ஆனால் தற்போது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஆணவப்படுகொலை தடுப்பு சட்டத்தை அவசர சட்டமாக இயற்ற வேண்டும்.