மீலாது நபி நாள்:
உலக சகோதரத்துவ நாளாகக் கடைபிடிப்போம்!
இஸ்லாமியர் யாவருக்கும் வாழ்ததுகள்!

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாது நபி தினத்தில் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விசிக சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1400 ஆண்டுகளுக்கு முன்னர் இம்மண்ணுலகில் தோன்றிய மகான் நபிகள் நாயகம் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் நல்வழிப்படுத்த மகத்தான நன்னெறிகளைப் போதித்தார். இறையச்சத்தின் மூலமே மனிதகுலத்தை நல்வழிப்படுத்த இயலும் என்பது அவரின் நம்பிக்கையாகும். இறைவனுக்கு மட்டுமே அஞ்சுதல் வேண்டும் என போதித்த நபிகள் நாயகம் வேறு எதற்காகவும் அஞ்சிட தேவையில்லை என்றும்; குறிப்பாக, மனிதனுக்கு மனிதன் அஞ்சவே கூடாதென்றும் போதனைகள் வழங்கினார்.
இறைவனுக்கு மனிதவடிவத்தில் உருவம் அமைப்பதும் அதனையே இறைவனென்று நம்பி வணங்குவதும் உண்மையான இறைவழிபாடு ஆகாதென்று வலுவாக நம்பியவர். அதனால், இறைவனுக்கு இணை வைத்தலும் உருவ வழிபாடும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் போதித்தவர். இறைவனுக்கு
உருவம் படைப்பது இறைவனை அவமதிப்பதாகும் என போதித்த அவர், தன்னையும் முன்னிறுத்தாத உயர்நெறியை வழங்கியவர்.
இறைவனுக்கு உருவம் படைக்கக் கூடாதென கூறிய அவர்,
தனது உருவத்தையும் எத்தகைய சூழலிலும் முன்னிறுத்தக் கூடாதென வலியுறுத்தினார். அந்த அடிப்படைக் கருத்தியலை எக்காலத்திலும் திரித்துவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தியவர். இன்றும் அத்தகைய திரிபுநிலை அடையாத ஒரு கோட்பாடாகவே இஸ்லாம் விளங்குகிறது. இதுவே நபிகள் நாயகம் அவர்களின் இணையற்ற தலைமைத்துவத்திற்கு மகத்தான சான்றாகும்.

அத்துடன், சகோதரத்துவமே மானுடத்தின் மீட்சிக்கு அடிப்படை என்பதைப் போதித்தவர். உலக மாந்தர்கள் யாவரும் உயர்வு- தாழ்வு என்னும் பாகுபாடுகளின்றி,
பகை- மோதல் ஏதுமின்றி
ஒரே குலமாக வாழ்வதற்கு சகோதரத்துவம் தான் இன்றியமையாதது என வலியுறுத்தியவர். அத்தகைய சகோரத்துவத்தை இன்றும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குரிய மகத்தான வழிகாட்டுதலை வழங்கிய மகான் நபிகள் நாயகம். இத்தகு மகத்தான தலைமைத்துவ ஆற்றல் வாய்ந்த மகானின்
பிறந்தநாளான ‘மீலாது நாளை’
“உலக சகோதரத்துவ நாளாக” கடைபிடிப்போம்.
சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் விசிக சார்பில் மீலாதுநபி தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.