2021 ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் பெறும் சான்றோர்கள்…
தமிழ்நாடு முதலமைச்சர்
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ‘அம்பேத்கர் சுடர் ‘ விருது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
சமூகம், அரசியல், பண்பாடு,
கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு
“அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ” ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர், தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா,
ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள்ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவரிசையில் 2021ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
இந்த ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்” விருதினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ‘தளபதி’ மு.க. ஸ்டாலின்
அவர்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.
கடந்த சில பத்தாண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையான ‘மாநில ஆதிதிராவிடர்- பழங்குடியினர் ஆணையம் அமைத்திட வேண்டுமென்பதை’ ஏற்று அதனை வெற்றிகரமாக மாண்புமிகு முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றியுள்ளார். அதற்கான சட்டமொன்றை இயற்றியதுடன் அந்த ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட பிற பொறுப்பாளர்களையும் உடனடியாக நியமித்துச் சாதனை படைத்துள்ளார்.
அத்துடன், பல பத்தாண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று ” பண்டிதர் அயோத்திதாசர் ” அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் மணிமண்டபம் அமைக்கப்படுமெனவும், பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிப்புச் செய்துள்ளார். மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவையும் தனது தலைமையில் உருவாக்கியுள்ளார்.
இத்தகைய அரும்பணிகளைப் பாராட்டி இந்த ஆண்டுக்கான (2021) “அம்பேத்கர் சுடர் ” விருதினை மாண்புமிகு முதல்வர்
தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
அடுத்து, பெரியாரின் வழியில் சமூகநீதிக்காகத் தொடர்ந்து பாடாற்றிவரும் மதிமுக பொதுச்செயலாளர் ‘புரட்சிப்புயல்’
திரு. வைகோ அவர்களைப் பாராட்டி அவருக்கு ” பெரியார் ஒளி ” விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்..
மற்ற நான்கு விருதுகளுக்கான சான்றோரையும் அவ்வாறே அடையாளம் கண்டு அவர்களுக்கு வழங்குவதில் உவகை அடைகிகிறோம்.
இந்த விருதுகள் வழங்கும் விழா வரும் திசம்பர் திங்கள் இறுதியில் தலைநகர் சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மிகவும் எளியமுறையில் கொண்டாடப்படுமெனவும் அதற்கான தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
2021-ஆண்டுக்கான
விசிக-விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் பின்வருமாறு:
அம்பேத்கர் சுடர் –
மாண்புமிகு முதல்வர்
‘தளபதி’ மு.க. ஸ்டாலின்.
பெரியார் ஒளி-
மதிமுக பொதுச்செயலாளர்
திரு. வைகோ எம்.பி.
காமராசர் கதிர் –
நெல்லை கண்ணன்.
அயோத்திதாசர் ஆதவன்-
குடியரசு கட்சி தலைவர் பி.வி.கரியமால்.
காயிதேமில்லத் பிறை-
அல்ஹாஜ் மு. பஷீ்ர் அகமது.
செம்மொழி ஞாயிறு –
செம்மொழி க. இராமசாமி.
இவண்:
தொல்.திருமாவளவன்
நிறுவனர்- தலைவர், விசிக.


